×

கிருஷ்ணனை நீலமேக வண்ணம் கொண்டவனாக சித்தரிப்பது ஏன்?

கிருஷ்ணனை நீலமேக வண்ணம் கொண்டவனாக சித்தரிப்பது ஏன்? மனித வாழ்க்கையில் அத்தகைய நிறம் கொண்டவர் யாரையும் காண்பதில்லையே?
– ஸ்வர்ணா, கன்னியாகுமரி.

மனித குலத்தில் நீலக் குழந்தைகள் உண்டு. Blue Baby என்று மருத்துவ ரீதியாக அழைக்கப்படும் அந்தக் குழந்தைகள் பிறக்கும் போதே இதயத்தில் சுத்த ரத்தமும், அசுத்த ரத்தமும் கலப்பதால், அத்தகைய நிறம் பெறுகின்றன என்பார்கள். ஆனால், கிருஷ்ணனை நீலமேக சியாமள வண்ணன் என்றழைப்பதற்கு, பக்தர்களைக் காக்கும் அவனுடைய பரந்த இதயம்தான் காரணம். ஆமாம், கருமேகம் நீரைத் தேக்கி வைத்து மழையாகப் பொழிந்து மண்ணை வளப்படுத்துகிறது; மக்களின் தாகம் தணிக்கிறது. அந்த மேகநிறம் கொண்ட கண்ணனும் தன் கருணை மழையால் பக்தர்களை காக்கிறான்.

மேகம் சூரியனின் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி தருகிறது. அதுபோல கண்ணனின் பேரருள் பிரச்னைகளை தீர்த்து, வாழ்வில் நல் திருப்பங்களை ஏற்படுத்தும். மேகம் சூழ்ந்த வானம் மழையின் குளிர்ச்சியை மட்டுமே உணர்த்துகிறது. அதேபோல் கண்ணனின் அருள் நல்லனவற்றை மட்டுமே அருள்கிறது. கார்மேகத்திலிருந்து வீழும் மழை, குப்பை, கூளங்களை அடித்துச் செல்வதுபோல் கண்ணனின் பக்தியில் நம் மன அழுக்குகளும், அவலங்களும் அடித்துச் செல்லப்படுகின்றன.

இந்த ஒற்றுமையால்தான் கண்ணனை மேகநிறம் கொண்டவனாக பெரியோர் வர்ணித்துள்ளனர். இதில் ஒரு வேடிக்கையையும் சுவைத்துணரலாம். இந்திரனின் கோபத்தால் பெய்த பெருமழையிலிருந்து கோகுலத்தையே காத்தவன் கண்ணன். அந்தக் கண்ணனைத்தான் கார்மேக வண்ணனாக போற்றிப் புகழ்கிறோம்.

தியானத்தின் மூலம் முற்பிறவியை காணமுடியுமா?
– விஜய், ஈரோடு.

முடியாது. தியானம் என்பது அலைபாய்கின்ற மனதை ஒருமுகப்படுத்தி செய்யக்கூடிய பயிற்சி. தியானம் செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெறும். ஆத்ம ஞானம் கூடும். முற்பிறவியைக் கண்டறிய மனிதர்கள் யாராலும் இயலாது என்பதே நிதர்சனமான உண்மை.

கணபதி ஹோமம் செய்த பிறகு ஹோமத்திற்கு பயன்படுத்திய கற்களை எத்தனை நாட்களுக்குப் பிறகு அப்புறப்படுத்த வேண்டும்?
– கிருபானந்தன், பாண்டிச்சேரி.

ஹோமத்தில் இருக்கும் வெப்பம் முழுமையாக தணிந்தவுடன் எடுத்து விடலாம். ஹோமத்தின்போது அளிக்கப்படும் ஆஹூதிகள் முழுமையாக பஸ்மம் ஆகவேண்டும். அனல் முற்றிலுமாக அணைந்திருக்க வேண்டும். குறைவான ஆஹூதிகள் கொண்ட சிறிய அளவிலான ஹோமம் எனும்போது அன்றைய தினமே சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக ஹோம குண்டத்தை அப்புறப்படுத்திவிடலாம்.

அனல் இன்னமும் தணியவில்லை எனும்போது மறுநாள் காலையில் எடுக்கலாம். இதில் மூன்றாவது நாள், ஐந்தாவது நாள் என்ற கணக்கு எதுவும் கிடையாது. அதில் உள்ள பஸ்மத்தை எடுக்கும் வரை ஹோம குண்டத்தின் புனிதத்தன்மை காக்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதனருகில் அமர்ந்து சாப்பிடுவது, அதனருகே அவ்வப்போது குறுக்கிலும் நெடுக்கிலும் நடப்பது கூடாது. அதாவது அறியாமல்கூட அதன்மீது எச்சிலோ, இதர உணவுப் பண்டங்களோ, நமது பாதமோ பட்டுவிடக் கூடாது.

தொகுப்பு: அருள் ஜோதி

The post கிருஷ்ணனை நீலமேக வண்ணம் கொண்டவனாக சித்தரிப்பது ஏன்? appeared first on Dinakaran.

Tags : Krishna ,Swarna ,Kanyakumari ,
× RELATED பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட...